• 7 years ago
கடந்த நான்கு நாட்களாக கொட்டி தீர்த்து வந்த கனமழை நேற்று காலையில் சற்று ஓய்வெடுத்தது. பின்னர் மாலையில் மீண்டும் தொடங்கி இரவு வரை பெய்தது. இன்று காலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் ஆரம்பித்த மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இலங்கைக்கு அருகே வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு திசை நோக்கி நகர்ந்து மன்னார் வளைகுடா பகுதியில் மையம் கொண்டிருப்பதாலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த மாதம் 31ம் தேதி முதல் முதல் இன்னிங்ஸ் இரண்டாம் இன்னிங்ஸ் என்று வெளுத்து வாங்கி வரும் மழையினால் சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேற முடியாத சூழலில் உள்ளனர்.

நேற்று காலை முதல் மழையின் கோரத்தாண்டவ பிடியில் இருந்து தப்பித்தோம் என்று சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் வானிலை ஆராய்ச்சி மையம் நாளை வரை மழை நீடிக்கும் என்று அறிவித்திருந்தது. சொல்லி வைத்தார் போல் இன்று காலையில் இருந்து கடலோர மாவட்டங்களிலும் சென்னை நகரிலும் மழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள இடங்களை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டு மீட்பு நடவடிக்கை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளனர். இதனிடையில் நகர் பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை மாநகராட்சி துரித நடவடிக்கை எடுத்து அகற்றி வருகின்றனர்.

இன்று சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் கடலூர் நாகை புதுகை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்க அனைத்து இடங்களிலும் பிளீசிங் பவுடர் தெளிக்கப்படுகிறது. தொற்று நோய் ஏற்பட்டுள்ளவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற அரசு அறிவுறுத்தியுள்ளது.

Category

🗞
News

Recommended