#BOOMINEWS | 'சோனி' உடன் இணைகிறது 'ஜீ தொலைக்காட்சி நிறுவனம் |

  • 3 years ago
புதுடில்லி: இந்திய தொலைக்காட்சி வர்த்தக சந்தையில் மிகப் பெரிய நிறுவனமான 'ஜீ என்டர்டெயின்மென்ட் என்டர்பிரைசஸ்' விரைவில் 'சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா' நிறுவனத்துடன் இணைய உள்ளது.
ஜீ தொலைக்காட்சி நிறுவனத்தில், அதன் பங்கு தாரர்கள் தரப்பிலிருந்து முக்கிய நிர்வாகிகளை நீக்க கோரி அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இணைக்கப்பட்ட நிறுவனத்தில், சோனிக்கு 52.93 சதவீத பங்கும்; மீதி 47.07 சதவீத பங்கு ஜீ நிறுவனத்துக்கும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இணைப்புக்கு பிறகான நிறுவனத்தில், சோனி, கிட்டத்தட்ட 11 ஆயிரத்து 690 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாகவே, ஜீ நிறுவனத்தில் அதன் பங்குதாரர்களில் சிலர், தலைமை நிர்வாகியான புனித் கோயங்கா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். குறிப்பாக, 'இன்வெஸ்கோ டெவலப்பிங் மார்கெட்ஸ் பண்ட்ஸ்' மற்றும் 'ஓ.எப்.ஐ., குளோபல் சீனா பண்டு' ஆகிய நிறுவனங்களின் தரப்பிலிருந்து இந்த கோரிக்கை வலுவாக வைக்கப்பட்டது.இந்த இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து, ஜீ நிறுவனத்தில் 17.9 சதவீத பங்குகளை வைத்துள்ளன. இந்த நிலையில் தான் இணைப்பு அறிவிப்பு வந்துள்ளது. இணைப்புக்கு பிறகான நிறுவனத்தின் நிர்வாக குழுவில், பெரும்பான்மையான உறுப்பினர்கள் சோனி நிறுவனத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும்; புனித் கோயங்கா, தலைமை பொறுப்பை வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1992ல் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் நிறுவனரான சுபாஷ் சந்திரா குடும்பத்தினரின் பிடியை விலக்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. அதேசமயம், சோனி மீடியா நிறுவனத்தின் விரிவாக்கத்துக்கு இந்த இணைப்பு பயன்படும் வகையில் இருக்கும் என கருதப்படுகிறது. 'ஜீ என்டர்டெய்ன்மென்ட்' மற்றும், 'சோனி இந்தியா' ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து, புதிய நிறுவனமாக மாறிய பின், அது 70 தொலைக்காட்சி சேனல்கள் 2 'வீடியோ ஸ்ட்ரீமிங்' சேவைகள், இரண்டு சினிமா ஸ்டூடியோ, ஆகியவற்றைக் கொண்ட, இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனமாக உருவெடுக்கும். இவ்விரு நிறுவனங்களின் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியானதை அடுத்து, ஜீ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பங்கு விலை தேசிய பங்குச் சந்தையில் 30.50 சதவீதம் அதிகரித்து 333 ரூபாயாக உயர்ந்தது.

Category

🗞
News

Recommended