• last year
ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln, பெப்ரவரி 12, 1809 — ஏப்ரல் 15, 1865) ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார்.

ஐக்கிய அமெரிக்காவைப் பிளவுபடாமல் காக்க, தென் மாநிலப் பிரிவினைக் கருத்தாளர்களை எதிர் கொண்டு உள்நாட்டுப் போர் நடத்தி வெற்றி பெற்றவர். இவர் 1863ல் அடிமைகள் விடுதலை பெற புகழ்பெற்ற விடுதலை எழுச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 1865இல் ஐக்கிய அமெரிக்காவின் 13 வது அரசியல் சட்டத் திருத்தத்தின் வழி அடிமை முறையை ஒழித்தார். இவருடைய தலைவருக்கான பண்புகளை அறிய இவர் நடத்திய உள்நாட்டுப் போர், மற்றும் அடிமை முறையை எதிர்த்து இவர் நாட்டு மக்களுக்கு விழிப்பு ஏற்படுத்து வகையில் எழுப்பிய குரலும் முக்கியமானவை. கெட்டிஸ்பர்க் சொற்பொழிவு எனப் புகழ்பெற்ற இவர் ஆற்றிய உரை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. உள்நாட்டுப் போர் முடியும் தறுவாயில் தென் மாநிலங்களுடன் கடுமையாக இல்லாமல் இணக்கமான முறையில் அமெரிக்க ஒன்றியத்தை நிறுவ முயன்றார். இவர் அடிமை முறையை ஒழிப்பதில் ஒரு சிறிதும் தளர்வில்லாமல் உறுதியாக இருந்ததை ஒரு சிலர் கடுமையாக சாடினார்கள் (எ.கா. காப்ர்ஹெட்ஸ்). ஆனால் வேறு சிலர் இவர் போதிய விரைவுடன் அடிமை முறையை ஒழிக்கவில்லை என்றும், அடிமை முறையை போற்றிய தென் மாநிலங்களிடம் உள்நாட்டுப்போரின் இறுதியில் போதிய அளவு கடுமையாக நடந்துகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினர். இறுதியில் 1865 இவர் வாஷிங்டன் டி. சி யில் உள்ள ஃவோர்டு அரங்கில் ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் கொல்லப்பட்டார். அமெரிக்க ஒன்றியத்தின் ஒற்றுமைக்காக உயிர் துறந்து புகழ் எய்தினார்.

Category

😹
Fun

Recommended